புதுக்கோட்டை, ஜூன் 2: தமிழகத்தில் உள்ள கல்குவாரிகளில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அருணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்யும் பணிகள் கனிமவளத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களால் தொடங்கப்பட்டுள்ளது. குவாரி குத்தகைதாரர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் தலைக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.
வெடிபொருட்களை அனுமதி பெற்ற நபர்களிடம் பெற்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெடிவைப்பாளர் மூலமாக குறைந்த சக்தி கொண்ட வெடிப்பொருட்களை பயன்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் அருகில் உள்ளோர் பாதிக்கப்படாத வகையில் வெடி வைத்து கற்களை உடைக்க வேண்டும், முதலுதவி பெட்டி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் குவாரிப்பணி மேற்கொள்ளக் கூடாது. காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி உரிமையாளர்களும் விதிகளின்படி குவாரிபணி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் விதிகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.