புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து தந்தை, 3 மகள்கள் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி ஊராட்சி அண்ணா நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் பாபு(37). இவர் பாசி, மணி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு எப்சியா(15), லீதியால்(13), ரெச்சல்(9) என்ற 3 மகள்கள் உள்ளனர். எப்சியா 10ம் வகுப்பு, லீதியால் 9ம் வகுப்பு, ரெச்சல் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 33 ஆண்டுகளுக்கு முன் (1990ம் ஆண்டு) அரசால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மகள்களுடன் பாபு தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் பாபுவும் அவரது 3 மகள்களும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பொதுமக்கள் வந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.