புதுக்கோட்டை, ஆக.31: புதுக்கோட்டை அருகே ஜவுளிக்கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானது. புதுக்கோட்டை மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டி பேராவூரணி செல்லும் சாலையில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மாடியில் பிரண்ட்ஸ் பார்க் என்ற பெயரில் துணிக்கடை வாடகைக்கு செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை அணவயல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை அருகேயுள்ள கடைக்காரர்கள் மாடியில் பூட்டியிருந்த துணிக்கடையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கடை உரிமையாளர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் பூட்டியிருந்த கடையை திறந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது. இச்சம்பவம் மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.