புதுக்கோட்டை,ஆக.20: புதுக்கோட்டை அருகே பல தலைமுறைகளாக தனி நபர்கள் அனுபவம் செய்து வந்த 51 சென்ட் நிலத்தில் உள்ள கட்டடங்களை காவல்துறையினர் பாதுகாப்போடு வருவாய்த்துறையினர் பொக்லேன் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட சிவகாமி நகர் உள்ள 51 சென்ட் நிலத்தை பல தலைமுறையாக தனி நபர்கள் அனுபவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அரசு நிலத்தில் அனுபவம் செய்யப்பட்டு வருவதால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதே இடத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைய உள்ள நிலையில் நீதிமன்றம் அனுமதி பெற்று அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்போடு வருவாய்த்துறையினர் பொக்லேன் இயந்திரங்களை கொண்டு நேற்று அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றவந்தவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அதனையும் மீறி ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.