புதுக்கடை, செப்.3: புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் மகன் முகம்மது சம்நாத் (39). ஆட்டோ டிரைவர். இவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு ராமன்துறை பகுதியை சேர்ந்த பியூலா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி பிரச்னையால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பியூலா கடந்த 4 மாதங்களாக பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசிப்பதாக தெரிகிறது. இதனால் சம்நாத் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (2ம்தேதி) காலை சம்நாத் வீட்டில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். அக்கம் பக்கத்தினர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்று போலீசார் விசாரித்த போது, சம்நாத்தை அப்பகுதியினர் கடந்த 31ம் தேதி கடைசியாக பார்த்ததாகவும், அதன் பிறகு வீடு பூட்டி கிடந்ததாகவும் தெரிவித்தனர். இறந்து 3 நாட்கள் வரை ஆனதால் தூக்கில் அழுகிய நிலையில் உடல் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக புதுக்கடை எஸ்எஸ்ஐ செல்லதுரை வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரித்து வருகிறார்.