புதுக்கோட்டை, ஜூன் 24: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில், மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, மன்னர் குடும்பத்தின் சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் ரகுபதி பேசியதாவது: மன்னர் ராஜகோபால தொண்டைமான் 103வது பிறந்த நாள் விழா இன்றையதினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், பொதுமக்கள், மன்னர் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசின் சார்பில், 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான மன்னர் ராஜகோபால தொண்டைமான் 23ம் தேதி அன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னர் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், புதுக்கோட்டை மாநகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட மன்னர் ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார். அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் உருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.
மேலும், மன்னர் ராஜகோபால தொண்டைமான் பிறந்தநாள் விழாவினை, பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா, சின்னத்துரை, முன்னாள் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், ராஜகோபால் தொண்டைமான், பிரித்திவ்ராஜ் தொண்டைமான், சஞ்சீவினி தொண்டைமான், ராதா நிரஞ்சனி தொண்டைமான், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.