புதுக்கோட்டை, ஜூன் 30: புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் வரும் ஜூலை 18 முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள், 50ஆவது ஆண்டு கம்பன் பொன் பெருவிழா நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கம்பன் கழகத்தின் விழாக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, பொன் பெருவிழாவின் தேதியை கம்பன் கழகத்தின் தலைவர். ராமச்சந்திரன் நேற்று அறிவித்தார்.விழா மங்கலம், விருதளிப்பு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதைச்சோலை, சுழலும் சொல்லரங்கம், நற்றமிழ் முற்றம், கவியரங்கம், ஏழில் உரை, பரிசளிப்பு, கம்ப நாட்டியம், பாட்டு மன்றம், சந்திப்பு வளையம், கனல் உரை, கம்பனிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழக்கம்போல 10 நாட்களும் வடக்கு ராஜவீதியிலுள்ள நகர்மன்றத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டது. கம்பன் கழகத்தின் செயலர் சம்பத்குமார் மறைவுக்குப் பிறகு, கூடுதல் செயலராக இருந்த புதுகை பாரதி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் புதிய செயலராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 50ஆம் ஆண்டு பொன் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 7ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.