தேனி, ஆக. 31:தேனியில் உள்ள புதிய பஸ்நிலையம் அருகே, மருத்துவ ஸ்கேன் மையம் நடத்தி வருபவர் வேல்முருகன். இவர், புதிதாக ஸ்கேன் இயந்திரம் வாங்க தனது நண்பர் வெங்கட் மூலம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மெடிக்கல் ஹெல்த் சென்டர் நடத்தி வரும் ஸ்ரீராஜ் மகன் வேணுகோபால் என்பவரை அணுகினார். அவர் புதிய ஸ்கேன் இயந்திரத்தை ரூ.75 லட்சத்திற்கு வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வேல்முருகன் பல்வேறு தவணைகளில் வேணுகோபாலின் வங்கிக் கணக்கிற்கு ரூ.33.48 லட்சம் வரை அனுப்பியுள்ளார். ஆனால், வேணுகோபால் கூறியபடி புதிய ஸ்கேன் இயந்திரமும் வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், பல மாதங்களாக இழுத்தடித்து ரூ.8 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். பாக்கியுள்ள ரூ.25.48 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் மாவட்ட எஸ்பி சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வேணுகோபால் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.