திருச்சி, ஆக.27: திருச்சியில் ஒலிக்குறியீடுகளை பயன்படுத்தி புதிய முறையில் தமிழ் மொழி வாசித்தல் கையேடு புதிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புனித வளனார் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் வளனறிவு இந்த கையேட்டினை வெளியிட, அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் மற்றும் ஸ்டான்லி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் இக்கையேட்டினை தயாரித்த ஆசிரியர் செல்வகுமார் தன்னார்வமாக வருகை தந்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சுமார் இரண்டு மணி நேரம் தமிழ் வாசித்தலில் புதிய முறை என்கிற தலைப்பில் பயிற்சி அளித்தார்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியை எளிமையாக கற்பிக்க, வாசிக்க, வைக்க, புதிய முறைகள், தேவைப்படுகிறது. ஏனென்றால் இன்று மாணவர்களிடையே எழுத்துக்களை அடையாளம் காணுதல், குறில் நெடில் வேறுபாடு, எழுத்துக்கூட்டி வாசித்தல், விரைவாக வாசித்தல், ஏற்ற இறக்கத்தோடு வாசித்தல் என அனைத்து நிலைகளிலும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டிலே முதல்முறையாகவும், புதிய முறையாகவும் ஒலிக்குறியீடுகளை மையப்படுத்தி எவ்வாறு எழுத்துக்களை அறிமுகம் செய்வது, குறில் நெடில் வேறுபாட்டினை அடையாளம் கண்டு படிப்பது, விரைவாக வாசிப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள்வது, எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கு எந்த முறைகளை கையாள்வது என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் முழுமையான தீர்வாக இந்த நூல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
எழுத்துக்களை அறிமுகம் செய்வதிலிருந்து செய்தித்தாள் வாசிப்பது வரை வெறும் 24 பக்கத்தில் நான்காயிரம் சொற்களைக் கொண்டு, படங்கள் அற்ற முழுமையான தமிழ் வாசித்தல் பயிற்சி கையேடாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்துமே வீடியோவாக தயாரிக்கப்பட்டு “கற்றல் மேம்பட’’ என்ற YouTube channel இல் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்தும் புத்தகத்தில் QR CODE மூலமாக கற்க எளிமைப்படுத்தி உள்ளார். இந்த நிகழ்வில் எந்த விதமான அழைப்பும் இன்றி, தன்னார்வமாக மாணவர்களை எப்படியாவது வாசிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், ஆர்வத்தோடும் திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலே முதல் முறையாக இவ்வகையான தமிழ் வாசித்தல் பயிற்சி கையேடும், ஆசிரியருக்கு தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. இதுவே முதல் முறையாகும். முன்னதாக சுகுமார் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் முரளி நன்றி கூறினார்.