திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(48). இவர் கடந்த 2014ம் ஆண்டு தான் கட்டி வந்த புதிய வீட்டின் முதல் மாடிக்கு மின் இணைப்பு வேண்டி அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதில் புதிய மின் இணைப்புக்கு உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுகுமார்(52) என்பவர் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்க முடியும் கூறியுள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.2 ஆயிரம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் சிறப்பு நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் சுகுமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் லஞ்சம் கேட்டதற்கா ரூ.10 ஆயிரமும், வாங்கிய குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் என ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் சுகுமாரை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.