கோவை, ஜூன் 23: கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அரசுக்கு விடுத்த கோரிக்கை மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை குறைத்து, தனியார் மனமகிழ் மன்றங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும், 23 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் என்டு டூ என்ட் புதிய பில்லிங் நடைமுறையை அவசர கதியில் நிறைவேற்றக்கூடாது. டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தற்போது டாஸ்மாக் கடைகளில் புதிய பில்லிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை அவசர காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது’’ என தெரிவித்துள்ளனர். வரும் ஜூலை 9ம் தேதி மத்திய தொழிற்சங்கம் நடத்தக்கூடிய நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.