சேந்தமங்கலம், செப்.3: எருமப்பட்டி வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட கற்போர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் அருள் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவித் திட்ட அலுவலர் குமார் பயிற்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கிராமப்பகுதிகளில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள், கல்வி பயிலாமல் ஏதோ ஒரு வகையில் இடை நிற்றல் மூலம் கல்வி அறிவு இல்லாமல் போய்விடுகிறது. அதனை கண்டறிந்து தன்னார்வலர்கள் அவர்களுக்கு எழுத்தறிவு பயிற்சியை அளிக்க வேண்டும். தன்னார்வலர்கள் கற்பிக்கும்போது கற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணம் அவர்களுக்கு அதிகரிக்க வேண்டும்.அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.இப்பயிற்சியில் 51 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அனைத்து இடங்களிலும் புதிய பாரத எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டு எழுத்தறிவு பயிற்சி கொடுக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.