வருசநாடு, செப். 7: கடமலைக்குண்டு அருகே பாலூத்து, தேவராஜ்நகர் மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கடமலை, மயிலாடும்பாறை பகுதியில் உள்ள பள்ளியில் தினமும் பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகள் காலை, மாலை வேளைகளிலும் பள்ளி செல்வதற்கு அப்பகுதியில் உள்ள தேனி-வருசநாடு சாலையில் நின்று பேருந்தில் ஏறி செல்வது வழக்கம். இதேபோல் விவசாயிகளும், பொதுமக்களும் பல மணி நேரம் காத்திருந்து வெயில், மழையில் நனைந்தபடியே பயணம் செய்கின்றனர்.
இப்பகுதியில் இருந்த நிழற்குடை சிதிலமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை இப்பகுதியில் கட்டித்தரவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை நிழற்குடை கட்டித் தரவில்லை. எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய நிழற்குடை கட்டிக்கொடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.