ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 25: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சவேரியார்பட்டிணம் விலக்கு பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு திறப்பு விழா காணப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் ஏதேனும் தீ விபத்து நடந்தாலும் இங்கிருந்து தான் தண்ணீர் நிரப்பிய வாகனத்தில் மீட்பு படை வீரர்கள் செல்வார்கள்.
இவ்வளவு முக்கியம் வாய்ந்த இந்த தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு பக்கமாக சுமார் 200 மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது. ஆனால் புதிதாக கட்டிடம் கட்டப்பட்ட பகுதி வரை புதிய சாலை அமைக்கப் படாமல் விட்டு விட்டதால் சிறுமழை பெய்தாலும் ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அவசர காலத்திற்கு மீட்பு பணிக்கு செல்லும் தீயணைப்பு வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் தான் மின் நிலையமும், புயல் காப்பகமும் உள்ளது. ஆகையால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதிக்கு திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சம்மந்தப்பட்ட நிலையங்கள் வரை உள்ள சாலையை அடுத்த மழை காலம் வருவதற்கு முன்பாகவே உடனடியாக சாலையை சீர்அமைத்திட உடனடியாக சம்மந்தபட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.