மண்டபம்,ஆக.13:பிரப்பன்வலசை ஊராட்சி அலுவலகம் செல்லும் பகுதியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே ராமநாதபுரம்-ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரப்பன்வலசை கிராமத்திற்கு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையில் இருந்து ஊராட்சி அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலை தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், சாலையில் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்து விட்டது.
இச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் பல நாட்கள் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டது. இதனால் அந்த பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியும் ஆனது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் சேதம் அடைந்த சிமெண்ட் சாலையை சீரமைத்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.