கோவை, ஜூலை 13: கோவை மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சார்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்பபெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். நிர்வாகிகள் துர்கா, மைத்தேயி, ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதினியம் ஆகிய 3புதிய சட்டங்களை திரும்பபெற வேண்டும். குற்றவியல் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில் மாற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. புதிய குற்றவியல் சட்டங்கள் மாநில அரசை அதிகாரமற்றதாக மாற்றும். சாமானிய மக்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.