ராமநாதபுரம், ஆக.21: ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ராமநாதபுரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.115 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தையும், சூரன்கோட்டையில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தையும், கமுதி அருகே நீராவியில் ரூ.53.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தையும் காணொளிக் காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சூரன்கோட்டையில் உள்ள கால்நடை மருந்தக கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குநர்கள் பாண்டி, அரசு, செங்குட்டுவன், கார்த்திக்கேயன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி,ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், சூரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் தெய்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.