ஓசூர், மே 6: ஓசூர் அருகே புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சப்கலெக்டரிடம் மனு அளித்தனர். ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம், கோபனப்பள்ளி பகுதிகளில், தனியார் கல்குவாரிகள் தொடங்குவது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நாகொண்டப்பள்ளியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓசூர் சப்கலெக்டர் சரண்யா தலைமை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பஞ்சாட்சிபுரம், கொரட்டகிரி, தண்டரை, அடவி சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே, இப்பகுதியில் உள்ள 8 கல் குவாரிகளால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வீடுகளில் விரிசல் ஏற்படுகின்றன.
குவாரிகளுக்கு வந்து செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, கூடுதலாக குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சப்கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதை தொடர்ந்து, கோபனப்பள்ளி கிராமத்தில் அமைய உள்ள தனியார் கல்குவாரி தொடர்பாக நடந்த கூட்டத்தில், எந்தவித எதிர்ப்புமின்றி அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். இந்த கருத்துக்களை கேட்டறிந்த சப்கலெக்டர் சரண்யா, கருத்துக்கள் மற்றும் புகார்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகத்துக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.