லால்குடி, செப்.5: புள்ளம்பாடியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய அரசு விரைவு சொகுசு பேருந்தை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். லால்குடி அருகே புள்ளம்பாடியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இப்பேருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புள்ளம்பாடி-சென்னை சென்று இப்பேருந்தினை தொடர்ந்து இயக்க வேண்டும் என சௌந்தர பாண்டியன் எம்எல்ஏ போக்குவரத்து துறை அமைச்சரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில் நிறுத்தப்பட்ட இப்பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வந்த நிலையில் நேற்று இரவு புதிய சொகுசு பேருந்து படுக்கை வசதியுடன் கூடிய புதிய விரைவு பேருந்து துவக்க விழா புள்ளம்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக திருச்சி கிளை மேலாளர் வெங்கடேசன், கோட்ட மேலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் புதிய பேருந்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் புள்ளம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் ஆலீஸ்செல்வராணி, ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், அரசு விரைவு போக்குவரத்து கழக தொமுச திருச்சி பணிமனை செயலாளர் ரெக்ஸ் டேவிட், பேரூராட்சி துணைத் தலைவர் இந்திரா காந்தி, திமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, நம்புகுறிச்சி பெரியசாமி, புதூர்பாளையம் அசோக், காணக்கிளியநல்லூர் ராஜமாணிக்கம், கனகராஜ், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.