‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பது போல, 2020ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2021 எனும் புத்தாண்டில் தடம் பதித்துள்ளோம். வழக்கம்போல ஒரு ஆண்டு முடிவதாக எண்ணிக்கொண்டு, இந்த ஆண்டை நாம் துவங்கி விட முடியாது. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நாட்கள் நமக்கு பல விஷயங்களை உணர்த்தி இருக்கின்றன. முதலாவதாக சேமிப்பு. சிறு அளவிலாவது நாம் கட்டாயம் பணத்தை சேமிக்க வேண்டும். அப்போதுதான் நமது அவசரத்தேவைக்கு, யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியும். ஊரடங்கால் வேலை இழந்த பல பேர், அன்றாட பொழுதை கடக்கவே மிகவும் சிரமமடைந்தனர். அப்போதுதான் சேமிப்பின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். இன்று வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் மிகவும் குறைவு தான். குறைந்தபட்சமாவது ஒரு தொகையை நாம், குறிப்பிட்ட கால இடைவெளியில் சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.இரண்டாவதாக தூய்மை. முன்பு எல்லாம் வெளியே சென்று, வீட்டிற்கு வருபவர்கள் கை, கால்களை சுத்தமாக கழுவிய பின்பே வீட்டுக்கு செல்வார்கள். சிலர் குளிப்பதும் கூட உண்டு. இதையெல்லாம் தற்போது நாம் கடைபிடிப்பது இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையில், கைகளை சோப் கொண்டு கழுவுதல் முக்கிய பங்கு வகித்தது. இனி வரும் காலங்களிலும் சுற்றுப்புறத்தையும், உடல்நலனையும் பேணி காப்பது அவசியம். மூன்றாவது ஆரோக்கியம். பொதுவாக, நம் உடல் ஆரோக்கியத்திற்கு தூய்மையான நீர், தரமான உணவு மிகவும் அவசியம். ஊரடங்கு நாட்களில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டபோது, வெளியூர்களில் தங்கி பணியாற்றியவர்கள் மிகவும் சிரமமடைந்தனர். ஓட்டல்களில் வாங்கி சாப்பிட்டே பழகியவர்கள் கூட, வீட்டில் தொடர்ந்து சமைக்க வேண்டிய சூழ்நிலை. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க, பாரம்பரிய உணவு வகைகளை தேடிப்பிடித்து பலர் சமைக்கத் துவங்கினர். இதற்கு ஓரளவு பலன் கிடைத்ததையும், வீட்டுச்சமையலே ஆரோக்கியமானது என்பதை, கொரோனா மூலமாக நாம் உணர்ந்ததையும் மறுக்க முடியாது. தேவையற்ற சுற்றுப்பயணங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தல் என அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்தாண்டு வீட்டிலேயே அதிக நாட்கள் அடைந்து கிடந்தவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரம், குடும்ப சகிதமாக அனைவரும் மனம் விட்டு பேச கிடைத்த வாய்ப்பு என்று கூட சிலர் ஊரடங்கு நாட்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டனர். நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு நடப்பதால், அவர்களின் கல்வி பாதிப்பு ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் நிலைதான் பரிதாபமான நிலையில் உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காத அளவு, புதிய திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். மக்களை வதைப்படுத்தும் சட்டங்கள், நிதி நெருக்கடியை சமாளிக்க மக்கள் மீது, பொருளாதார சுமையை சுமத்தும் திட்டங்களைப் பற்றி யோசிக்காமல், மக்களின் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்ட வேண்டும். அடுத்ததாக, உருமாறிய கொரோனா என்ற மிரட்டல் இருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் சில மாதங்களுக்கு தொடர்வதன் மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மீண்ட பொருளாதாரத்தை நாடு மட்டுமல்ல… நாமும் மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு வாழ்வாதாரம், உடல் நலன் ‘ஆரோக்கியமாக’ இருக்க வேண்டும். அதை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நம் கைகளில்தான் உள்ளது. தெளிவாக திட்டமிட்டு அதை நாம் மீட்டெடுக்க வேண்டும். நம்மை வளப்படுத்தும் அந்த திட்டங்களோடு, இந்த ஆண்டை நாம் புதியதாக தொடங்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்……