புதுச்சேரி, மே 28: புதுச்சேரி, மங்கலம் காவல் நிலைய துணை உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் மங்கலம், பெருங்களத்துமேடு, உறுவையாறு, கோர்க்காடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நத்தமேடு பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள பெட்டிக்கடையில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அந்த கடைக்கு போலீசார் சென்றபோது அங்கிருந்த சிறுவர்கள், இளைஞர்கள் சிலர் தப்பி ஓடினர். கடையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் புதுவை நத்தமேடு ஏரிக்கரை சாலையை சேர்ந்த அரிகிருஷ்ணனின் மகன் சஞ்சீவ் (31) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 39 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரமாகும்.