திருப்பூர்,மே26: வடமாநிலங்களில் இருந்து புகையிலை,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ரயில்களில் கடத்துவதை தடுப்பதற்காக ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக திருப்பூர் ரயில் நிலையம் இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாகவே வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து அவற்றை வெளி மாநில தொழிலாளர்கள் கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் ரயில் மூலமாக அவை கொண்டு வரப்படுவதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் தினமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடகா,பீகார்,ஒடிசா,உ.பி.,ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வட மாநில தொழிலாளர்களிடமிருந்து அதிகளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.