போடி/கம்பம், பிப். 25: தேனி மாவட்டம், போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது வல்லபாய் படேல் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி(57) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கிருந்து 2 கிலோ அளவுக்கு புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போடி நாட்டாண்மைகாரன் தெருவைச் சேர்ந்த குமரன் என்பவரை தேடி வருகின்றனர். கம்பம்- காமயகவுண்டன்பட்டி சாலையில் வடக்கு காவல் நிலைய எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்டதில் ஒரு சாக்குப் பையில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆட்டோவை ஓட்டிவந்த கம்பம், உத்தமபுரத்தைச் சேர்ந்த பிரகாஷை (33) போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.