நன்றி குங்குமம் டாக்டர்நம்முடன் பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர் வட்டங்களில் பழி போடும் குணமுள்ள நபர்கள் சிலரை பார்த்திருப்போம். இவ்வளவு ஏன்? சமைக்கும்போது உணவு தீய்ந்து போனால், யாரும் உதவிக்கு வருவதில்லை என்று வீட்டில் இருப்பவர்களிடம் கத்துவது அல்லது நாம் கவனிக்காமல் வண்டியை ஓட்டி அடுத்தவர் மீது மோதினாலும், அவரிடம் சண்டைக்குப் போவது… இப்படி சாதாரணமாக நடக்கும் விஷயங்களுக்குக் கூட அடுத்தவர் மீது பழி போட்டுத்தான் நமக்குப் பழக்கம்.இதை ‘தவறிலிருந்து தப்பிக்க நினைக்கும் எல்லோருமே பழிவாங்குபவர்கள் அகங்காரமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், தங்கள் சொந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விரும்பாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் செய்யும் தவறுக்கான பழியை ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள். தங்கள் பக்கம் தவறு எதுவும் நடக்காது என்பதை திடமாக நம்புவதே அவர்களின் இயல்பு’ என்கிறார்கள் பழி பற்றிய சமூக உளவியல் ஆய்வாளர்கள்.A Theory of Blame என்ற புத்தகத்தில், மனிதனின் பழி சுமத்தும் செயலுக்குப் பின்னால் உள்ள உளவியல் பற்றி பிரவுன் பல்கலைக்கழகம், மக்காலெஸ்டர் கல்லூரி மற்றும் புளோரிடா மாநில பல்கலைக்கழகங்களின் உளவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்களான Bertram F. Malle, Steeve Guglielmo, Saint Paul மற்றும் Andrew E.Monroe ஆகியோர் இந்த புத்தகத்தில் ‘பழி’ பற்றிய சில கோட்பாடுகளை பின்வருமாறு விவரிக்கின்றனர்.‘உண்மையில், நீங்கள் செய்யும் தவறை ஏற்காது மற்றவர்கள் மீது பழிபோடுவதன் மூலம் உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்கிறீர்கள். சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலான நேரம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நடந்த தவற்றுக்கான பழியை ஏற்றுக் கொள்வது, மற்றவர் முன் பலசாலியாகத்தான உயர்த்துமே தவிர, ஒருபோதும் உங்களை பலவீனமாக்காது’ என்கிறார் பெர்ட்ராம் F மால்லே.இக்கட்டான அலுவலக சூழலில், ஒருவர் மீது அடுத்தவர் பழிபோட முயற்சிக்கும்போது எழுந்து நின்று தனது சொந்த தவறை ஏற்றுக் கொள்ளும் நபர், அனைவரையும் விட தன்னை மேலே உயர்த்திக்கொள்ளும் நபராக இருப்பார். அனைத்து நல்ல நிர்வாகிகளுமே இந்த உண்மையை கண்டிப்பாக புரிந்து வைத்திருப்பார்கள். ஏனெனில், உயர்மட்ட நிர்வாகம் எப்போதுமே தீர்வுகளைத்தான் விரும்பும். மக்களை குறை கூறுவதை விரும்பாது.இந்த சூழலில் தவறு செய்தவர் அந்தத் தவறை ஏற்றுக் கொள்ளாதபோது அதனால் ஏற்பட்ட சிக்கலை எப்படித் தீர்க்க முடியும். தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கான தடையை ஒருவர் கடந்து விட்டாலே பிரச்னைக்கான தீர்வை எளிதில் எட்டிவிட முடியும் என்பதை உணர வேண்டும்.Andrew E.Monroe குறிப்பிடும்போது, சில நேரங்களில் இந்த பழி விளையாட்டு(Blame game) தனிப்பட்ட உறவுகளையும் குழப்பிவிடும். தனிப்பட்ட உறவுகளில், எந்த ஒரு பிரச்னை நடந்தாலும் உங்களுடைய தவறை நீங்கள் ஏற்க மறுக்கும் வரை, அவற்றை சரிசெய்யும் கட்டத்தை நீங்கள் தொடங்க முடியாது.நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கவும் முடியாது. அதேநேரத்தில் மற்றவர் முற்றிலும் தவறாக இருக்கவும் முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மீது எளிதில் பழி போட்டுவிடலாம். ஆனால், அவ்வளவு சுலபமாக உங்கள் சொந்தத் தவறுகளையும், தவறான நகர்வுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு ஒரு சுலபமான வழி உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து, உங்கள் நடத்தையில் தவறு என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் உணர்ந்து, அதை சரி செய்து கொள்ள நீங்கள் முயற்சிப்பதே!அடுத்த கட்டமாக, பழியை ஏற்றுக் கொள்ள பயப்படும்போது இயல்பாகவே நீங்கள் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். இது நான் செய்தது தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக வார்த்தைகளை மாற்றிப் பேச, மற்றவர்களைக் குறைகூற அல்லது பொய்களை சொல்லும் நிலைக்கு உங்களைக் கொண்டுவிடும். இத்தகைய நபர் மற்றவர்களின் மதிப்பீட்டில் கீழிறங்கி விடுகிறார்.இவர்களின் நடவடிக்கைகளையும், அவர்கள் கூறும் பொய்களையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணராமலேயே இதுபோல் செய்கிறார்கள். மற்றவர்கள் மீது பழிபோடுபவர்கள், அகங்காரம் மற்றும் திமிர் பிடித்தவராக இருப்பதோடு, மிகவும் பாதுகாப்பற்றவராகவும் இருக்கிறார்.நடந்த தவறுக்கான விளைவை ஏற்றுக் கொள்வதன் மூலம் தவறு செய்வது மனித இயல்பு. எல்லோருக்குமே நிகழக்கூடிய ஒன்று என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். அதன்மூலம் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும், அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்த முறை அதைவிட சிறப்பாக செய்வதற்கான வழியும் கிடைக்கிறது. ஆனால், தவறை ஒப்புக் கொள்ளாவிட்டாலோ, உங்கள் முன்னேற்றப் பாதைக்கான வழியை நீங்களே அடைத்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம்.சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பழி விளையாட்டு மாபெரும் தொற்றுநோயாக இருக்கலாம் என்பதை 2010-ஆம் ஆண்டில் ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நடத்திய ஆய்வில், ஒரு குற்றச்சாட்டுக்கு ஒருவர் ஆளாகியிருப்பது, தொடர்பில்லாத நிகழ்வுகளில் அவரைச் சார்ந்த மற்றவர்களையும் குறை கூற வழிவகுக்கும்’ என்பதை நிரூபித்துள்ளது.மாறாக, தவறை நேர்மையாக ஒப்புக் கொள்ளும் நபர், பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுவதற்கோ அல்லது இழிவாக பார்ப்பதற்கோ பதில் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவதோடு, ‘நாமும் தவறுகளை நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்தையும் மற்றவர்களிடத்தில் ஏற்படுத்துகிறார்’ என்கிறார் இந்த ஆய்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான Steeve Guglielmo .இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. தான் செய்யாத தவற்றுக்காக பழியை தன் மீது போட்டுக் கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மிகக்குறைந்த சுய மரியாதை கொண்டவராக, தாங்கள் செய்யும் தவறுகளையெல்லாம் எளிதில் அவர் மீது போடும் நபராக மற்றவர்கள் எளிதில் குறிவைக்கும் நபராகிவிடுகிறார். மிக நம்பிக்கையாக நீங்கள் செய்யும் தவறுக்கு மட்டுமே பொறுப்பேற்கவும், நீங்கள் செய்யாததை மறுக்கவும் செய்வது அவசியம்.மேலும், ‘தவறுகள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அளிப்பவை. சிறந்த உறவுகளையும், சிறந்த முன்னேற்றங்களையும், நம்மை நாமே செதுக்கிக் கொள்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தித் தருபவை. தனி நபராக அல்லது ஒரு அமைப்பாக தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது உங்களை சிறந்த நபராக அல்லது வளர்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. எனவே, பழிபோடும் விளையாட்டிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்கிறது இந்த சமூக உளவியல் குழு.– உஷா நாராயணன்
புகார் கூறுவதை நிறுத்துங்கள்
previous post