வேலூர், ஜூன் 20: அண்ணன், தம்பி தகராறில் புகார் அளிக்க வந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் நேதாஜி நகர், மெஜஸ்டிக் வில்லா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(55). சிவன் பக்தரான இவர் சாமியாராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் குமரேசன்(58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரமேஷ் மற்றும் குமரேசனுக்கு நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ரமேஷிற்கும் அவரது அண்ணன் குமரேசனுக்கும் தகராறு எழுந்த நிலையில் குமரேசன் அவரது கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரமேஷை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியும், காலால் எட்டி உதைத்து தாக்கியும் உள்ளனர். இதுகுறித்து, ரமேஷ் பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் அங்கு விசாரணை நடத்திய போது, அண்ணன்- தம்பிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருதரப்பினரும் இது சம்பந்தமாக புகார் அளிக்க மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்துள்ளனர். அப்போது, மீண்டும் எஸ்பி அலுவலக நுழைவு வாயிலிலேயே தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்களை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அமர வைத்துள்ளனர். இதனிடையே ரமேஷ் அவரது இருசக்கர வாகனத்தில் தயாராக வைத்திருந்த மண்ணென்ணெய் கேனை எடுத்து வந்து அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். தொடர்ந்து, அவரது புகார் மனுவை பெற்று கொண்ட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அண்ணன்-தம்பி தகராறில் எஸ்பி அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.