Friday, June 9, 2023
Home » “பி” வைட்டமின்கள்-உணவு ரகசியங்கள்

“பி” வைட்டமின்கள்-உணவு ரகசியங்கள்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் வண்டார்குழலிநீரில் கரையும் வைட்டமின் வகையில் வருபவை “பி” வைட்டமின்கள். வைட்டமின் “சி” போன்ற ஒரே ஒரு வைட்டமின் அல்லது உயிர்ச்சத்து என்றில்லாமல், சிறு சிறு வேதியியல் மூலக்கூறுகளைக் கொண்ட பல வைட்டமின்களின் தொகுப்பாகவே கருதப்படுகிறது. டச்சு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் எஜிக்மன் என்ற மருத்துவர், 1889 ஆம் ஆண்டில், உடல்சோர்வு, உடல் எடை குறைவுடன் குழப்பமான மனநிலை மற்றும் மரணத்தை ஏற்படுத்திய அசாதாரண நிலை  திடீரென்று மக்களிடையே பரவியதைக் கண்டறிந்தார். “பெரிபெரி” என்னும் இந்நோய் நிலை, குறிப்பாக எங்கெல்லாம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் வெளிப்புறத் தவிடு அறவே நீக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் அதிகம் பரவி இருந்ததைக் கண்டறிந்து, இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதைக் கூறினார். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு “பி” வகை வைட்டமின் கண்டறியப்பட்டது.   “பி” வைட்டமின்களின் வகைபாடு“பி” வைட்டமின்கள் மொத்தம் எட்டு வகைப்படும். ஒவ்வொரு தனி “பி” வைட்டமின்னும் “பி 1, “பி2” என்று ஒரு குறிப்பிட்ட எண்ணால் குறிப்பிடப்படுகிறது. இந்த 1, 2 என்ற எண் அந்த “பி” வைட்டமின்னிலுள்ள ஒரே மாதிரியான பண்புகளைக்கொண்ட 1 அல்லது 2 அல்லது கூடுதலான அல்லது குறைவான வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது என்பதாகும். “பி 6” என்றால், அதில் “வைட்டமர்ஸ்” (vitamers) என்றழைக்கப்படும் 6 விதமான மிக முக்கியமான வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன என்று பொருள். “பி” வைட்டமின்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல், ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மையான பணிகளையும் உடலுக்குக் கொடுக்கின்றன. மேலும், எட்டு வகையான “பி” வைட்டமின்களும் ஒரே மருந்துணவுகளில் (Supplements) கிடைக்குமாறு தயாரிக்கப்படும்போது, அவை “பி காம்ப்ளக்ஸ்” வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன.  எட்டு வகை “பி” வைட்டமின்களும் அவற்றின் “வைட்டமர்ஸ்” வேதிப்பொருட்களுடன் கீழ்வருமாறு:1. தயமின் (B1) – தயமின், தயமின் மோனோபாஸ்பேட், தயமின் பைரோபாஸ்பேட்2. ரிபோபிளேவின் (B2) – ரிபோபிளேவின், பிளேவின் மோனோநியூக்ளியோடைட், பிளேவின் அடினைன் டைநியூக்ளியோடைட்3. நியாசின் ( B 3) – நிக்கோடினிக் அமிலம், நிக்கோடினமைட், நிக்கோடியூரிக் அமிலம்4. பான்டோதனிக் அமிலம் ( B 5) – பான்டோதனிக் அமிலம், பான்தனால், பான்டதைன்5. பைரிடாக்ஸின் (B 6) – பைரிடாக்ஸல், பைரிடாக்ஸமைன், பைரிடாக்ஸின், பைரிடாக்ஸால் பாஸ்பேட், பைரிடாக்ஸமைன் பாஸ்பேட், பைரிடாக்ஸின் பாஸ்பேட்6. பயோடின் ( B 7) – பயோடின்7. போலிக் அமிலம் (B 9) – போலிக் அமிலம், போலினிக் அமிலம், மீத்தைல் டெட்ராஹைட்ரோபோலேட்8. சயனோகோபாலமின் (B12)-சயனோகோபாலமைன், ஹைட்ரோகோபாலமைன், மீத்தைல் கோபாலமைன், அடினோசில்கோபாலமைன்.“பி” வைட்டமின்களின் உடலியங்கியல் செயல்பாடுகள்1. தயமின் (B 1) – தானியங்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றிலிருக்கும் கார்போஹைடிரேட் சத்தினை உடலின் உறுப்புகளுக்குத் (குறிப்பாக மூளை மற்றும் நரம்பு மண்டலம்) தேவையான ஆற்றலாக (கலோரி) மாற்றுவதற்கு உதவிசெய்கின்றன. மேலும், தசைகளின் இயக்கத்திற்கும், நரம்புத் தூண்டலுக்குத் தேவையான சமிங்ஞைகளைக் கடத்துவதற்கும் மிக அத்தியாவசியமான நுண்பொருளாக இருக்கின்றன. 2. ரிபோபிளேவின் (B2) – உடலிலுள்ள செல்களின் வேதிவினைகளுக்கும் பிற வளர்சிதைமாற்ற செயல்பாடுகளுக்கும் பிரதானமாக இருக்கும் நொதிகளுக்குத் துணையாக இருக்கும் கோஎன்சைம்ஸ் என்னும் துணை நொதிகளின் மூலப்பொருளாக ரிபோபிளேவின் செயல்படுகிறது. இந்தத் துணைநொதிகள், செல் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி, கொழுப்புச் சத்துக்களை சிறு மூலக்கூறுகளாக மாற்றுதல், மருந்துகளை ரத்த ஓட்டத்தில் சேர்த்து உறுப்புகளுக்குச் சென்றடையச் செய்தல் போன்ற மிக முக்கியப் பணிகளைச் செய்கிறது இந்த வைட்டமின். 3. நியாசின் (B3) – உணவிலுள்ள கார்போஹைடிரேட் சத்தினை, எளிய குளுக்கோஸாக மாற்றுவது நியாசின் சத்தின் பிரதானப் பணி என்றாலும், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளையும்,  கொழுப்பு மற்றும் புரதங்களின் வேதிவினை நிகழ்வுகளையும் பராமரிக்கிறது.  இவற்றுடன், இனப்பெருக்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கும், மனஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத் தேவையான ஹார்மோன்களின் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. 4. பான்டோதனிக் அமிலம் (B5) – உடலுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்திக்கும், பிற “பி” வகை வைட்டமின்களை உடலில் செயல்படும் நிலையில் மாற்றுவதற்கும் இந்த பான்டோதனிக் அமிலம் அத்தியாவசியமாகிறது. கை, கால் எரிச்சல், ஒவ்வாமை, முடி உதிர்தல், பூஞ்சைத் தொற்று, கண் நோய், சில வகையான மூச்சுக்குழாய் பிரச்சினைகள், நடுக்கம் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கும் இணைசத்தாக செயல்படுகிறது. 5. பைரிடாக்ஸின் (B 6)  – உணவிலிருந்து பெறப்படும் பேரூட்ட சத்துக்களான கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை உடலுக்குக் கிடைக்கச் செய்யும் வேதிவினைகளுக்கு உதவியாக இருக்கிறது. புலனுறுப்புகளுக்குச் சமிங்ஞைகளை அனுப்பும் வேதிப்பொருட்களின் (neurotransmitters உற்பத்திக்கும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் அத்தியாவசியமான சத்தாக இருக்கிறது. 6. பயோடின் (B7) – உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான வைட்டமின் என்பதால், autoimmune diseases என்று சொல்லக்கூடிய தன்னிச்சை நோய்கள், சோரியாசிஸ், சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும், முடி, நகங்கள் போன்றவற்றின் உருவாக்கத்திற்கும் அமைப்பிற்கும் தேவையான அமினோஅமிலங்கள் செயல்படுவதற்கு உதவிசெய்கிறது. 7. போலிக்; அமிலம் ( B 9) – உணவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் வேலையுடன், வேறு சில மிக மிக முக்கியமான செயல்பாடுகளைக் கொடுக்கிறது இந்த “பி” வகை வைட்டமின் என்றால் மிகையாகாது. காரணம், ஒருவரின் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையிலான வளர்ச்சிநிலை, நோய்கள் மற்றும் பாரம்பரியம் சார்ந்த செய்திக்குறியீடுகளைத் தாங்கியிருக்கும் மரபணுக்களான டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ க்களின் உருவாக்கத்திற்குத் தேவையான சத்தாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் வளர்ச்சிநிலை குறைபாடுகளால், பிறக்கும் குழந்தையின் தண்டுவடம் பாதிப்படைதலைத் (spina bifida) தடுக்கும் மிக முக்கியப் பணியையும் மேற்கொள்கிறது. 8. சயனோகோபாலமின் (B12) – டிஎன்ஏ வையும், எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் அத்தியாவசியமான சத்தாக இருக்கிறது. மேலும், மூளையின் அடிப்படை அலகான நியூரான் என்னும் செல் அமைப்பைப் பாதுகாத்து, அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கமைத்துப் பராமரிக்கும் மிக முக்கிய பணியைச் செய்கிறது. இதனால் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் குறையும் நிலை அல்லது மறதி நோய்களைத் (Alzheimer, Dementia) தவிர்க்கிறது.

“பி” வைட்டமின்களின் தேவையான அளவு
“பி” வைட்டமின்கள் நீரில் கரையக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதால், தினசரி உணவில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவற்றின் அன்றாடத் தேவையானது, இயற்கையான காய்கள், கீரைகள், பழங்கள், முழுதானியங்கள், பதப்படுத்தப்படாத அசைவ உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதால்தான் பூர்த்தி செய்யப்படும். வைட்டமின்கள் குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வைட்டமின்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு.

“பி” வைட்டமின் மருந்துகள் யாருக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன?“பி” வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டாலே ஒருவருக்கான ஒருநாளைக்கான “பி” வைட்டமின்கள் உடலுக்குக் கிடைத்துவிடும். இருப்பினும், கர்ப்பிணித் தாய்மார்கள், அசைவ உணவை அறவேத் தவிர்த்து சைவ உணவை எடுத்துக்கொள்பவர்கள், உடல் பருமனைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் குடல் மற்றும் இரைப்பை அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், முதியவர்கள், நாட்பட்ட சிறுநீரக, இதய, குடல் தொடர்பான நோயுள்ளவர்கள், காசநோயாளிகள், புற்றுநோயாளிகள், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளிட்டோருக்கு, “பி” வைட்டமின்கள் உடலில் குறைவாகவே  இருக்கும் என்பதாலும், உணவுகளிலிருந்து உட்கிரகிக்கப்படுவது போதுமான அளவில் இருக்காது என்பதாலும், மருந்துகள் மூலமாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. “பி”வைட்டமின்கள் நிறைந்த உணவுகள், குறைபாட்டு நோய்கள், மிகைநிலை உள்ளிட்ட செய்திகள் அடுத்தப் பதிவில் தொடரும்.  …

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi