மதுரை, ஜூன் 20: மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள லேக் ஏரியா பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பாலீத்தின் குப்பைகள் பெருமளவு கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் அங்கு தேங்கிக்கிடந்த குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த குப்பைகள் மளமளவென தீப்பற்றி எரியத்துவங்கியதால் மேலூர் சாலையில் அதிக அளவில் புகை சூழ்ந்தது. அவ்வழியாக சென்ற ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடனேயே சாலையை கடந்து சென்றனர். புகை மண்டலத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.