வேலூர், மார்ச் 4: வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு 80 மையங்களில் நேற்று தொடங்கியது. இதில் 15 ஆயிரத்து 781 பேர் தேர்வு எழுதினர். 202 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று, பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை வேலூர் மாவட்டத்தில் 141 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 628 மாணவர்கள், 8 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 985 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக வேலூர் மாவட்டத்தில் 80 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 80 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 85 துறை அலுவலர்களும், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், 19 வழித்தட அலுவலர்களும், தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 68 பறக்கும் படை உறுப்பினர்கள் என்ற 1,108 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 397 சொல்வதை எழுதுபவர்களாக தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி முதல் நாளான நேற்று மொழிப்பாடத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இவர்களுக்கு தேவையான வினாத்தாள்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 19 வழித் தடங்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தடைந்தனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் தேர்வு மைய, கண்காணிப்பாளரிடம் ஹால் டிக்கெட் காண்பித்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களையும் தேர்வு மையம் மற்றும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என ஏற்கனவே மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. விடைத்தாள்களில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணங்களை கொண்டு கிழிக்கவோ அல்லது தனியாக பிரித்து எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வர்கள் துண்டு சீட்டு வைத்திருத்தல், மற்ற தேர்வர்கள் பார்த்து எழுதுதல் விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கீன செயல்களாக கருதப்படுவதுடன், அதற்கான தண்டனையும் வழங்கப்படும். ஆகையால் தேர்வாளர்கள் தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.
பிளஸ்2 வகுப்பு மொழிபாடப்பிரிவில் நேற்று 15,781 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மொழிபாடத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 202 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மேலும் தனிதேர்வர்கள் 220 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 198 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். 22 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதற்கிடையில் பொய்கை அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று பார்வையிட்டார். அந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உடன் இருந்தார்.