பேரணாம்பட்டு, ஆக.26: பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாயமான மாணவி நேற்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை செய்ததில் குடியாத்தம் அடுத்த ரங்காசமுத்திரம் கிராமத்ைத ஆனந்தன்(22) என்பவர், மாணவியின் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும்போது பழக்கம் ஏற்பட்டதும், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அந்த மாணவியை மீட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், மாணவியை அழைத்து சென்ற ஆனந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.