நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட மன நலத்திட்டத்தின் சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்கள். மாணவ, மாணவிகள் ஒரு சிலருக்கு எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்தோ அல்லது தோல்வியோ ஏற்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் பெற்றோர்கள் அவர்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மாணவ, மாணவிகள் தோல்வியை கண்டு அஞ்சக் கூடாது. தங்களை மேம்படுத்திக்கொள்ள இதனை ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தகுந்த ஆதரவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளை திட்டுவதாலே, தண்டிப்பதாலோ எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்து எவ்வாறு தேர்வு எழுதலாம் மற்றும் கல்வி சார்ந்த ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். மேலும் மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகயில் மாறுதல் தென்பட்டாலோ, யாருடனும் பேசாமல் இருந்தாலும், மன இறுக்கம் மற்றும் பசி இன்றி தவித்தாலோ, மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்.
அவர்களுக்கு தகுந்த சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் மாவட்ட மனநலத்திட்ட குழு சார்பாக வழங்கப்படும். தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவியும் பெற, நாமக்கல் மாவட்ட மனநல உதவி எண்; 89030 79233 மற்றும் மாநில உதவி எண் 104, 14416, 14417. அனைவரும் ஒன்றிணைந்து நம் மாவட்டத்தை மாணவ, மாணவிகள் தற்கொலை இல்லாத மாவட்டமாக மாற உறுதியெடுப்போம். தோல்வியில் அஞ்சுதல் தவிர்த்து, அவர்கள் வெற்றிபெற வழி வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.