ஈரோடு, ஆக.5: ஈரோடு மாவட்டத்தில் 17 மையங்களில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் 3,325 பேர் தமிழக முதலமைச்சரின் திறனறித்தேர்வினை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் முதலமைச்சரின் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான முதலமைச்சரின் திறனறித்தோ்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 17 மையங்களில் நடந்தது. இத்தேர்வினை எழுத 3,678 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 353 பேர் ஆப்சென்ட் ஆகினர். 3,325 பேர் தேர்வினை எழுதினர். தேர்வானது ஓஎம்ஆர் விடைத்தாள் முறையில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினரும், அரசு தேர்வுகள் துறையினரும் செய்திருந்தனர்.