நாமக்கல், பிப்.28: பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணியில், எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டுமென இணை இயக்குனர் அறிவுறுத்தினார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் 3ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் வரும் 5ம் தேதியும் துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 27ம் தேதியும் நிறைவு பெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு 106 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 97 தனியார் பள்ளிகள் என மொத்தம் 203 பள்ளிகளைச் சேர்ந்த 18,461 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ் 1 தேர்வினை 18,966 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 86 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்வு பணியில், 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 1400 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பணிகளை ஒருங்கிணைக்க, கண்காணிப்பு அலுவலராக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று நாமக்கல் வந்து, தேர்வு பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல் அருகே ஏகே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் இணை இயக்குனர் முருகன் பேசுகையில், ‘தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். தேர்வுத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு, எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றி தேர்வை நல்ல முறையில் நடத்த வேண்டும். தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களும், முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்கு முதலாவதாக வந்து, பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். வினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் ஆசிரியர்கள், குறித்த நேரத்தில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாளை கொண்டு சேர்க்க வேண்டும். தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாளை பண்டலிங் செய்து, திருத்தும் மையத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும்,’ என்றார்.கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் கற்பகம், பச்சைமுத்து, ஜோதி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பொறுப்பு அலுவலராக டிஇஓ.,க்கள் நியமனம்
பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விற்கான வினாத்தாள்கள் நாமக்கல் மற்றும் ராசிபுரம், திருச்செங்கோடு என 3 இடங்களில் 3 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் வீதம் 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும், ஒரு முதுகலை ஆசிரியரும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் மையத்தை சென்று பார்வையிட்டு, வினாத்தாளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.