புதுச்சேரி, மே 17: பிளஸ்1 தேர்வு முடிவில் புதுச்ேசரி, காரைக்காலில் 96.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள 100 தனியார் பள்ளிகளை சார்ந்த 3,912 மாணவர்களும், 3,627 மாணவிகளும் என மொத்தம் 7,539 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 3,739 மாணவர்கள், 3,563 மாணவிகள் என மொத்தமாக 7,302 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதியில் ஆண்கள்-3,659, பெண்கள்-3,281 என 6,940 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள்-3,499, பெண்கள்-3,223 பேர் 6,722 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விழுக்காடு 96.86 சதவீதம் ஆகும். காரைக்கால் பகுதியில் ஆண்கள்-253, பெண்கள்-346 என 599 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள்-240, பெண்கள்-340 என 580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.83 சதவீதம் ஆகும். புதுச்சேரியில் 29 பள்ளிகள், காரைக்காலில் 11 பள்ளிகள் என 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. மேலும், சமஸ்கிருதம்-1, பிரெஞ்சு-44, இயற்பியல்-5, கணிப்பொறி அறிவியல்-76, கணிதம்-13, தாவரவியல்-1, பொருளியல்-9, வணிகவியல்-10, கணக்கு பதிவியல்-2, வணிக கணிதம்-4, கணிப்பொறி பயன்பாடு-31 என மொத்தமாக 11 பாடங்களில் 196 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.