நன்றி குங்குமம் தோழி
மணப்பெண்கள் புடவையை விட அதற்கான பிளவுஸ்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்ப பிரத்யேகமாக பிளவுஸ்களை டிசைன் செய்து தருகிறார் ‘யுடி டிசைனர் பிளவுஸ்’ உரிமையாளர் சுமதி.‘‘ஐ.டியில் வேலை பார்த்த எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எனக்கு டிசைனிங்கில் ஈடுபாடு இருந்ததால் 2015ல் ‘யுடி’யை துவங்கினேன். என்னுடைய சேமிப்பு மற்றும் இரண்டு டெய்லருடன் என் வீட்டிலேயே ஆரம்பித்தேன்.
முதலில் பிளவுஸ் மட்டுமில்லாமல் சல்வார், ஸ்கர்ட் என அனைத்து உடைகளும் தைத்து கொடுத்து வந்தோம். தையல் எனக்கு தெரியாது என்றாலும் நான் டிசைனிங் செய்வேன். ஆனால் தையல் குறித்த அடிப்படை விஷயங்களை என்னுடைய டெய்லரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்’’ என்றவர், தற்போது முழுக்க முழுக்க மணப்பெண் பிளவுஸ்களை மட்டுமே டிசைன் செய்கிறார்.
‘‘மணப்பெண்ணின் பிளவுசிற்கான மார்க்கெட் நன்றாக இருந்ததால் அதில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இதில் ஒவ்வொரு டிசைன்களும் எங்க டீம் உருவாக்கியது. புதுமையான பிளவுஸ் டிசைன்களின் டிரெண்ட் செட்டர் நாங்க என்பதில் பெருமையாக உள்ளது. எங்களின் டிசைன்களைதான் பலர் தற்போது பின்பற்றுகிறார்கள். மேலும் எங்களின் யு.எஸ்.பி இரண்டு நாட்களில் மணப்பெண் பிளவுஸ்களை டெலிவரி செய்வது.
நாங்க பல டிசைன்களை அறிமுகம் செய்திருந்தாலும், புதுமையாக என்ன டிசைன் செய்யப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே மணப்பெண்கள் எங்களை நாடி வருகிறார்கள். முன்பு கோல்டன் ஜரிதான் பயன்படுத்தி வந்தோம். தற்போது பல நிறங்களில் ஜரி மற்றும் கிரிஸ்டல் கொண்டு பிளவுஸ்களை அலங்கரிக்கிறோம். இவை எல்லாம் ஒரிஜினல் கிரிஸ்டல் என்பதால், பிளவுசிற்கு ரிச் லுக்கினை தருகிறது. எங்களின் ‘3டி டிசைன்’ ஐரிஸ் கலெக்ஷன் மணப்பெண் மத்தியில் ஹிட். 3டி முறையில் முதுகு மற்றும் கைகளில் டிசைன் செய்யும் போது பிளவுசின் அமைப்பே பிரமாண்டமா இருக்கும். தி.நகரில் மட்டும் இல்லாமல் தற்போது குரோம்பேட்டையிலும் எங்களின் சேவையை துவங்கியிருக்கிறோம்’’ என்றார் சுமதி.
தொகுப்பு: ரிதி