வத்திராயிருப்பு, ஆக.26: வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. மொத்தம் 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணையின் அருகிலேயே பூங்காவும் உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக பொதுமக்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு 4 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பூங்காவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்தும், பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறாததால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
இந்நிலையில், பூங்காவிற்குள் செல்ல பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பூங்காவில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.