சேந்தமங்கலம், ஜூன் 14: சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர் வைப்பது அடிக்கடி அடிதடி தகராறு மோதல் ஏற்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் வகையில் சேந்தமங்கலம் வட்டாரம் முழுவதும் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை ஓரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளனர். பேனர் வைக்க விரும்பினால் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை காவல்துறை ஆகிய துறை அலுவலகங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேந்தமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக திருவிழாக்களில் பேனர் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. இதனால் மோதல் சம்பவம் ஏற்பட்டுவிட்டது.
அதனை தடுக்கும் வகையில் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படும். வைக்கும் பிளக்ஸ் பேனர்களில் சமுதாயம் சார்ந்த வாசகங்கள் பிறர் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் வைக்கப்படும் பேனர்களுக்கு அனுமதியில்லை’ என்றனர்.