கரூர்: கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சமக்ரசிஷாவுடன் இணைந்து 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
இந்த உதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக தேவையான சான்று கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். எனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இநத சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், கோட்டாட்சியர் ரூபினா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சந்திரமோகன், முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி திட்ட அலுவலர் சக்திவேல் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.