பெரம்பலூர், செப். 5: பெரம்பலூர் மாவட்டத்தில் பிரம்மதேசம் ஊ.ஒ. நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை உள்பட 6-பேர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். வண்டலூரில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்குகிறார். ஆசிரியராக பணிபுரிந்து, இந்திய அரசின் மிக உயர் பதவியான, குடியரசுத் தலைவர் பதவியை வகித்தவர் டாக்டர் இராதா கிருஷ்ணன். செப்டம்பர் 5 ஆம் தேதி இவரது பிறந்த நாள் ஆகும். ஆசிரியராகப் பணிபுரிந்து, நாட்டின் உயர் பதவியை அடைந்த இவரது பிறந்த நாளை, ஆசிரியர் தினமாக இந்திய அரசு அறிவித்து கௌரவப் படுத்தியுள்ளது. அந்த நாளில் மாநில அளவில், தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, டாக்டர் இராதா கிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப் படுகிறார்கள்.
2023- 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனப்படும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதன்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் பணி புரியும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட, கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.இளவழகன், பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவெண்மணி சிதம்பரம் மானிய நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சாம்பசிவம், வேப்பந்தட்டை ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.பிரேமலதா ஆகிய 3 பேர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணி புரியும் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜெ.ரவிச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் அரசு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மெ.ஓம் பிரகாஷ், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை க.சித்ரா ஆகிய மூன்றுபேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.