உடுமலை, ஜூன் 18: அமராவதி அணை நிரம்பியதால் பிரதான கால்வாய் வழியாக நேற்று காலை உபரிநீர் திறந்துவிடப்பட்ட நிலையில் அணையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே கடைசி வாரம் பெய்ய துவங்கிய தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று நீர்மட்டம் 87.60 அடியாக உயர்ந்தது. நேற்று காலை நீர்மட்டம் 87.24 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1898 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியதால் 9 கண் ஷட்டர்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில், இடைவெளி வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.
நீர்மட்டம் 88 அடியை நெருங்கினாலே பாதுகாப்பு கருதி உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படும். இந்நிலையில் கீழ் மதகு வழியாக பழைய ஆயக்கட்டில் 8 கால்வாய் பாசனத்துக்காக ஆற்றில் 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம், சுமார் 25,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்நிலையில் நேற்று காலை அமராவதி அணையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது இதை எடுத்து பாசன தண்ணீர் வேகமாக வெளியேறத் துவங்கியது தகவல் அறிந்து வந்த பொதுப்பணி துறையினர் மணல் மூட்டைகளை அடக்கி கால்வாய் உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரி செய்தனர். இருப்பினும், கால்வாய் உடைப்பினால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியது.