ஒரத்தநாடு, மே 30: ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் திருவோணம் வேளாண்மை துறை சார்பாக முதலமைச்சரின் உங்களைத் தேடி வேளாண்மை துறை திட்டம் குறித்து காணொலி காட்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவோணம் வட்டாரம் பின்னையூர் மேற்கு கிராமத்தில் நேற்று உழவரைத் தேடி வேளாண்மை துறை திட்டங்கள் முகாமை காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திருவோணம் வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் சுதா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை விஞ்ஞானி மதிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் பங்கேற்றனர். இடுபொருள் கண்காட்சி அமைக்கப்பட்டு மானியங்கள் குறித்த விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. தொழில்நுட்பம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டன.