ஊட்டி, ஜூலை 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது தவிர நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் சிறிய குழாய்கள் மற்றும் கால்வாய்கள். தற்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், இந்த குழாய்கள் மற்றும் கால்வாய்கள் போதுமானதாக இல்லை.
இதனால், ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டு சாலையில், நடைபாதையில் கழிவு நீர் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசுவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து காந்தல் செல்லும் சாலையில் மற்றும் காந்தல் பகுதியில் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டும், உடைந்தும் பல இடங்களில் கழிவு நீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.