உடுமலை, ஜூன் 10: திருமூர்த்தி அணையில் துவங்கும் பிஏபி பிரதான கால்வாய், உடுமலை, வாளவாடி, சின்னப்புதூர், விளாமரத்துபட்டி வழியாக செல்கிறது. இதில், வாளவாடிக்கும், சின்னப்புதூருக்கும் இடையில் கால்வாயின் குறுக்கே குறுகிய பாலம் ஒன்று உள்ளது. இந்த வழியாக தோட்டசாலைகளுக்கு விவசாய பொருட்களை ஏற்றி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.மேலும், தளி, திருமூர்த்திமலை செல்ல குறுக்கு வழி என்பதால் உள்ளுர் மக்களும், சுற்றுலா வாகனங்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.இங்கு அமைந்துள்ள கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சற்று தடுமாறினாலும் கால்வாய்க்குள் விழும் ஆபத்து உள்ளது.எனவே, கால்வாய் பாலத்தின் தடுப்புச் சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.