சென்னை: யானை சின்னத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்தியதைப்போல் மற்ற கட்சிகளின் சின்னங்களிலும் மாற்றம் செய்து வேறு கட்சிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், த.வெ.க கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் த.வெ.க கொடியில் உள்ள எக்காளம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் த.வெ.க கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், தங்களுடைய சின்னமான யானை த.வெ.க கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல் உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அனுமதிக்குமா, தங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.