தென்காசி: சுரண்டை அரசு கல்லூரி பிஎச்டி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற்றது. இதில் அவரை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கல்லூரியில் வணிகவியல் துறையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்டி) மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்து வந்த பேராசிரியர் ஒருவர் வேறு கல்லூரிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இருப்பினும் மாணவி அதே கல்லூரியில் வணிகவியல் துறையில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வணிகவியல் துறைத்தலைவர் அஜித், சம்பந்தப்பட்ட பிஎச்டி மாணவியிடம் ஆய்வு வழிகாட்டியை மாற்றிவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். மேலும் அவர், தான் மனது வைத்தால் தான் ஆய்வு படிப்பை முடிக்க முடியும் என்று மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி முதல்வர் தனிப்பிரிவு, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தார். அதில், ‘வணிகவியல் துறை தலைவர் அஜித் கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றார். பிஎச்டி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆய்வு அறையில் அமர்ந்து கொண்டு முகம் சுழிக்கும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார். நான் சொல்வதை மட்டும் செய்யவில்லை என்றால் உனக்கு தடையில்லா சான்றிதழ் தரமாட்டேன். நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளலாம் என மிரட்டி வருகிறார். இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு ஆய்வுப்பணியை முடிக்க முடியாமல் திணறி வருகிறேன். வணிகவியல் துறை தலைவரிடம் இருந்து என்னை காப்பாற்றவும், இதுபோன்று வேறு எந்த மாணவிகளுக்கும் நடக்காத வகையில் வணிகவியல் துறை பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலின் பேரில் நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், ஆலங்குளம் டிஎஸ்பி முத்துப்பாண்டியன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், துணை தாசில்தார் முருகன், வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி ஆட்சி மன்ற குழு கூட்டப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் சின்னத்தாய் கூறுகையில், ‘கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் படி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குரிய பேராசிரியரால் கல்லூரியின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்றார்….