நெல்லை, செப். 2: பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபரை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர்சிங் என்பவரது வீட்டில் கடந்த 18ம் தேதி மர்ம நபர் ₹ 3 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை, ₹12 ஆயிரம் ஆகியவற்றை திருடி தப்பினார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (38) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.