நெல்லை, செப்.5: பாளை அண்ணா விளையாட்டரங்கில் 32 அணிகள் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி இன்று (5ம் தேதி) துவங்கி இருநாட்கள் நடக்கிறது. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டி இன்று (5ம் தேதி) துவங்கி நாளை(6ம் தேதி) மாலை வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 576 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது பிரிவுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். இதில் முதல் மூன்று இடங்களை வெல்வோருக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு கேடயங்களும் வழங்கப்படும். அத்துடன் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.