ஆரல்வாய்மொழி, ஜூன் 23: தோவாளையில் தனியார் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தோவாளையில் ஈஸ்வரன் என்பவர் தனியார் பால் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இதில் ஐஸ்கிரீம், தயிர், பால் ஆகியவற்றை விற்பனை செய்வதுடன், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளுக்கும் பால் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பால் விற்பனை செய்துவிட்டு, அதற்கான பணத்தையும் வாங்கிக் கொண்டு கடைக்கு வந்துள்ளார். பின்னர் அந்த பணத்தை மேஜையில் வைத்துள்ளார். இரவு சுமார் 10 மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
தொடர்ந்து மீண்டும் நேற்று காலை வழக்கம்போல் பால் விநியோகம் செய்வதற்காக கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பணம் வைத்திருந்த மேஜை திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கலாம் என்று நினைத்த போது, கேமராவும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு ஈஸ்வரன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் நிலைய உதவி ஆய்வார்கள் சதிஷ், ராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.