கண்டாச்சிபுரம், ஆக.26: விழுப்புரம் அருகே பால் வாங்க சென்ற சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன்(38), கூலி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் புவனேஷ்வரன்(10), அசோகபுரி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை புவனேஷ்வரன் பால் வாங்க விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ள கடைவீதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பால் வாங்கி கொண்டு செஞ்சி மார்க்கமாக சாலையோரம் இடது புறமாக சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அதே மார்க்கத்தில் காரைக்கால் பகுதியை சேர்ந்த அகஸ்டின் பால்(33) என்பவர் விழுப்புரத்திலிருந்து அனந்தபுரம் நோக்கி சிறுவன் சென்ற மார்க்கத்திலேயே காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது சிறுவனுக்கு அருகில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மற்றும் அசோகபுரியை சேர்ந்த செல்வி(38), என்ற பெண் மீதும் மோதி விபத்துகுள்ளானது.
இதில் செல்வி மற்றும் சிறுவன் புவனேஷ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுவன் புவனேஷ்வரன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கவும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த கெடார் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.