விழுப்புரம், செப். 2: பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். ஆட்சியர் பழனி, பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் வினித், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக, மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் அளவு, மாவட்டத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் பால் கொள்முதல் செய்யப்படும் அளவு, தயாரிக்கப்படும் பால் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அளவுகள், பால் குளிரூட்டும் மையங்களின் எண்ணிக்கை, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து விழுப்புரம் பால் பண்ணை மற்றும் மொத்த குளிரூட்டும் மையங்கள் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக செயல்படும் 18 பால் சேகரிப்பு வழித்தடங்களின் விவரம், விழுப்புரம் பால் பண்ணையில் இருந்து நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்ய ஏதுவாக பால் பாக்கெட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படும் 21 வழித்தடங்களின் விவரம் குறித்து அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஆவின் சேர்மன் தினகரன், பொது மேலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து, பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.12.98 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கால்நடை வளர்ப்போருக்கு தேவையான கடனுதவிகளை செய்து கொடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் செயலிழந்த கூட்டுறவு சங்கங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கும், புதியதாக பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, பால் உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பால் விற்பனை செய்யும் முகவர்களுக்கு உடனுக்குடன் பால் விற்பனை தொகை வழங்கப்பட்டு வருகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர மாடு வளர்ப்பு திட்டங்களை துவங்க முன்வரவேண்டும். அவர்களுக்கு கடன் வசதி போன்ற திட்டங்களை அளிக்க அரசு தயாராக உள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், என்றார்.