திருவண்ணாமலை, செப்.6: திருவண்ணாமலை அருகே பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பமானார். இதுதொடர்பாக, ஜாமீனில் வெளியே வந்திருந்த லாரி டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த நாறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார்(27), லாரி டிரைவர். இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திய 16 வயது சிறுமியிடம் சசிக்குமார் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக, ஏற்கனவே வேட்டவலம் போலீசில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில், சசிக்குமார் கைது செய்யப்பட்டார். ஆனாலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிறகும், தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அந்த சிறுமியை அச்சுறுத்தி தன்னுடன் அழைத்துச்சென்று சில நாட்கள் தனது வீட்டில் சசிக்குமார் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் சசிக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.